பறையர்கள் கிராமப் பொதுச் சபையில் இடம் பெற்றிருந்தனர். வரியை நிர்ணயிப்பதிலும் தமது கிராமப்பகுதி எந்த மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை நிர்ணயிப்பதிலும் இவர்கள் முடிவுகளை மன்னர்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனர். பொதுச் சபையில் இடம் பெற்ற இம்மக்கள் ‘பறை முதலி’ என்ற பெயரைப் பெற்றுள்ளனர். ‘முதலி’ என்ற சொல்லுக்கு ‘முதல்வன்’ என்ற பொருள் இருந்தது சிலர் மன்னரின் கடற்படையிலிருந்தும், காவலராக இருந்தும் பணியாற்றியுள்ளனர். ‘ஐநூற்றுப் பறையர்’ என்ற பெயர் ஐநூறு வீரர்கள் அடங்கிய படை என்று தெரிகிறது. பறையர்களுக்கும் ஒரு காலத்தில் வள்ளுவநாடு, புலையர் நாடு போன்ற நாடுகள் இருந்து வந்தன. ‘நாஞ்சில் வள்ளுவன்’ போன்ற குறுநில மன்னர்களும் இருந்துள்ளனர்.
பழங்குடியினரான ஆதி திராவிடர்களுக்கு கிராமத்தின் எல்லைகள் நன்கு தெரிந்திருந்தன. இந்த அடிப்படையில் இவர்களில் சிலர் கிராம அடிப்படை ஊழியர் பதவிகளில் இருந்து வந்துள்ளனர். இன்றும் பலர் அந்தப் பதவிகளைப்அந்தப் பதவிகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பழங்கால கிராம ஏடுகளில் சேரி, நத்தம், புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வெள்ளாளர் என்பவர் தொண்டை மண்டலத்தை ஆதிக்கம் செலுத்திய போது, பறையர்களுக்கு நிலத்தின்மீது இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலைத்த குடிகளாக வாழ்ந்த மக்கள் இவர்களில் பல குடியினர் இலங்கைக்கும், மொரிஷியஸ் தீவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும், மேற்கு இந்தியத் தீவுக்கும், பிஜி தீவுக்கும் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வருகின்றனர்.
பறையர்கள் தங்களுக்கென தனி புரோகிதர்களையும், ராணுவத் தலைவர்களையும் கொண்டு மிக உயர்ந்த சமூக அமைப்போடு வாழ்ந்து வந்தனர். பறையர்கள் சில சாதியினருக்கும் சமயக் குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில பழங்கோயில்களில் அவர்களுக்குத் தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
பார்ப்பனர்களும், பறையர்களும்!
‘விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை; பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!” என்று பாரதியார் பறையர் விடுதலைப் பற்றிப் பாடினாலும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை இன்னும் முழுமையாக ஒழியவில்லை.
தமிழகராதியில் ‘பறையன்’ என்ற சொல்லுக்குப் புரோகிதன் அல்லது வழிபாடு செய்பவன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில், காதணி விழா, பூப்பு நீராட்டு விழா, மணவிழா முதலிய குடும்ப விழாக்களிலும், இறப்பு நிகழ்ச்சிகளிலும் இசைவாணர்கள் அல்லது பறை என்னும் இசைக்கருவிகளை முழக்குபவர்கள் தவறாது இடம் பெறுவர். இசைவாணர்கள் இன்றைய சாதி அமைப்புப் படி ‘பறையன்’ என்ற இனத்தவராவர்.
பறையர்களும் சில பெயர்களும்
தமிழகத்தில் வேளாண்மையை மட்டும் குலத்தொழிலாகக் கொண்டவர்களைத் தான் ஆதிக்குடியினர் எனக் கொள்ளலாம். இவர்கள் உழவுப்பறையரென்றும், நெசவுப் பறையரென்றும் அழைக்கப்பட்டனர்.
பறையருக்கு தலையாரி, தண்டாசி என்ற பெயர்கள் உண்டு. தலையாரி என்பவன் நிலங்களின் எல்லையை நன்கு அறிந்திருந்தான். இதனால் மற்றச் சாதியினரைப் பார்க்கப் பறையன் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்து வருகிறான் என்று அறியப்படுகிறது.
பறையர், ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள், பழந்தமிழர், பச்சைத் தமிழர், கலப்பில்லாத தமிழ்க்குடியினர். ஸ்ரீ ராமானுஜரால் திருக்குலத்தார் (புனித குடும்பத்தை சார்ந்தவர்கள்) என்றும், காந்தியடிகளால் ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்றும் அழைக்கப்படுகிறார்கள். திருவாரூர், தியாகராசர் கோயிலோடு தொடர்பு கொண்ட பறையரை ‘யானை ஏறும் பெரும் பறையர்’ என்று அழைக்கின்றனர்.
உழவுப் பறையர், நெசவுப் பறையர், கோட்டைப் பறையர், கோட்டாகாரர் பறையர், முரசுப் பறையர், அரிப்புக்காரப் பறையர், கோலியப் பறையர், கட்டிப்பறையர், குடிப்பறையர், வேளாப் பறையர், அம்புப் பறையர், வள்ளுவப் பறையர், தீப் பறையர், கொங்குப் பறையர், சோழியப் பறையர், கிழக்கிந்திய பறையர், பந்தல் முட்டிப் பறையர், பூவன் பறையன் என்று பறையரை வகைப்படுத்துவர். இவற்றின் விரிவைக் கீழே காண்போம்.
தமிழ்நாட்டுக் கோயில்களின் திருவிழாக்களில் பறையர்களுக்கு ராஜ மரியாதைகளைப் பெற்று வந்துள்ளனர். பறையர்களில் ஒரு பிரிவினரான ‘கோட்டைப் பறையன்’ என்பவர்களே. தங்களுக்கென கோட்டையை வைத்திருந்ததை தங்கள் பெயர்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்னொரு பிரிவினர் தங்களைக் கோட்டைக்கார பறையர் எனக் கூறிக் கொண்டுள்ளனர். இப்பிரிவினர் குதிரைத் தொழுவங்களை வைத்துக் குதிரைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.
இன்னொரு பிரிவினர் படையில் முரசு கொட்டியதால் ‘முரசு பறையர்’ என்ற பெயர் பெற்றுள்ளனர். படை நடத்தும்போது இம்மக்கள் வெற்றி முரசு கொட்டுபவர்களாகவும் இருந்துள்ளனர். முரசுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மோசி கீரனாருடைய பாடலிலிருந்தும் அறியலாம்.
வரலாற்று பதிவு தொடரும்.......